மோட்டார் சைக்கிள் திருடர் சிக்கினார்
ஓட்டப்பிடாரம் அருகே மோட்டாா் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே மேலசுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ரமேஷ் (வயது 37). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30-ந்தேதி காலையில் தனது மோட்டார் சைக்கிளை குறுக்குச்சாலை பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். வேலைமுடிந்து 1-ந்தேதி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அக்கம் பக்கத்தில் விசாரித்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் ஆகியோர் பெட்ரோல் பங்க்கில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தனர்.
அப்பொழுது 2 மர்ம நபர்கள் மோட்டார் கைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், பேரூரணி சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிக்கண்ணன் (20), மாரிமுத்து மகன் முத்துசுந்தர் (20) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாரிகண்ணனை ஓட்டப்பிடாரம் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையில், மாரிகண்ணனின் கூட்டாளியான முத்துசுந்தர் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் ஒருவரது வீட்டில் திருட முயற்சித்த போது கையும் களவுமாக பிடிபட்டு புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.