அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் பா.ம.க. முதல் இடத்தை பெற முடியும். டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் பா.ம.க. முதல் இடத்தை பெற முடியும் என்று வாலாஜாவில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.;
ராணிப்பேட்டை
அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் பா.ம.க. முதல் இடத்தை பெற முடியும் என்று வாலாஜாவில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் வாலாஜாவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி தலைமை தாங்கினார். வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன், மேற்கு மாவட்ட தலைவர் ஆறுமுக முதலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சரவணன் வரவேற்றார்.
பா.ம.க. மாநில இளைஞர் சங்க தலைவரும். முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதல் இடத்தைபெற முடியும்
பா.ம.க.வில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் நல்ல பெயர் எடுத்து பொது மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். நேர்மையாக, அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். இனிவரும் காலம் பா.ம.க.வின் காலம். தமிழக மக்கள் நமக்கு வாய்ப்பளிக்கும் நம்பிக்கையோடு இருக்கின்றனர். பொறுப்பாளர்கள் அந்த நம்பிக்கையை பெற்று, வாக்குகளாக மாற்ற வேண்டும்.
சென்னையில் நேற்றுமுன்தினம் பா.ம.க. மாநில பொதுக்குழு நடைபெற்றது. அது முடிந்த பிறகு பராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலில் பொதுக்குழுவை நடத்த காரணம், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக பா.ம.க இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அ.தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் பா.ம.க. முதலிடத்தை பெற முடியும்.
அ.தி.க .இளைஞர்கள் உள்ள கட்சி பா.ம.க. இது நமக்கு மிகப்பெரிய பலம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இளைஞர்கள் நம் கட்சியில் இருக்கிறார்கள். 42 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் டாக்டர் ராமதாஸ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி இருக்கின்றார். மக்கள் ஒரு ஏக்கத்தில் இருக்கின்றனர். நீங்கள் மக்களை சந்தித்தால் மாற்றம் நிச்சயம் ஏற்படும். கொள்கையில் முதலிடத்தில் உள்ள கட்சி பா.ம.க. புகையிலை ஒழிப்பு, மதுவிலக்கு, விவசாய பிரச்சினைகளை தீர்ப்பது உள்ளிட்டவைகளில் பா.ம.க. முதலிடத்தில் உள்ளது.
ஆட்சிக்கு வரமுடியும்
2026-ல் பா.ம.க. ஆட்சி ஏற்பட வேண்டும். நிழல் நிதி அறிக்கை, நிழல் வேளாண்மை பட்ஜெட் போடுகிற கட்சி பா.ம.க. உண்மையான பட்ஜெட் சட்டமன்றத்தில் நாம் தாக்கல் செய்யும் நிலை வரவேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகள் என்ன என்பது நமக்குத் தெரியும், அதற்கான தீர்வுகளும் நமக்குத் தெரியும். மக்கள் நம்பிக்கையை பெற்றால் நாம் ஆட்சிக்கு வரமுடியும். அதற்கான சூழல் தமிழகத்தில் உள்ளது. கழிவு நீர் பிரச்சினைக்காக சைக்கிள் பேரணி நடத்திய கட்சி பா.ம.க. ஆயிரக்கணக்கான மக்களோடு டாக்டர் ராமதாசும், நானும் சைக்கிள் பேரணி நடத்தினோம்.
கர்நாடகாவில் பாலாற்றில் 18 தடுப்பணைகள் உள்ளது. ஆந்திராவில் 32 தடுப்பணைகள் உள்ளது. தமிழகத்தில் ஒரு தடுப்பணைத்தான் உள்ளது. 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. வீட்டு வரி உயர்ந்துள்ளது. கொரோனாவினால் பொதுமக்களின் வருவாயும். வாழ்வாதாரமும் பாதித்துள்ளது. பெரிய தனியார் பள்ளியில் குழந்தைகளை படிக்க வைத்தவர்கள், இன்றைக்கு அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். மழையால் வெள்ளம் வருவது ஒரு வரம். இதை நாம் பாதுகாக்க வேண்டும். இனிவரும் காலம் மிகவும் சோதனையான காலம். நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எந்த சமுதாயத்திற்கு பிரச்சினை என்றாலும், முதலில் குரல் கொடுத்தவர் டாக்டர் ராமதாஸ். இன்றைக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கு யாரும் வாய் திறக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு கேட்கும் புள்ளி விவரத்தை, எனக்கு அதிகாரம் இருந்தால் 3 நாட்களில் எடுத்துக் கொடுத்து விடுவேன். தமிழக அரசு இதை செய்யும் என்று நம்புகிறேன். மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டுமென்பதை, பெண்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். அதிகாரத்தில் 2 வருடத்தில் நாம் முதலிடத்தில் வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம் உள்ளிட்டோர் பேசினார்கள்.
ராணிப்பேட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் நல்லூர் சண்முகம், சமூக நீதிப் பேரவை மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் ஜானகிராமன், மாநில செயற்குழு உறுப்பினர் காவனூர் டாக்டர் சுப்பிரமணியன், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சபரி கிரீசன், வாலாஜா மத்திய ஒன்றிய தலைவர் குமார், நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி குமார் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வாலாஜா நகர செயலாளர் ஞானசேகர் நன்றி கூறினார்.