சென்னையில் உள்ள நெசவாளர்கள் சேவை மையத்தில் மத்திய ஜவுளித்துறை இணை மந்திரி
சென்னையில் உள்ள நெசவாளர்கள் சேவை மையத்தை மத்திய ஜவுளித்துறை இணை மந்திரி பார்வையிட்டார்.
மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வளர்ச்சி ஆணையரகத்தின் (கைத்தறி) ஒரு அங்கமான சென்னையில் உள்ள நெசவாளர்கள் சேவை மையத்தை மத்திய ஜவுளி மற்றும் ரெயில்வே இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஷ் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர், நெசவாளர் சேவை மையத்தின் வடிவமைப்புப் பிரிவு, நெசவுப் பிரிவு மற்றும் சாயமிடுதல் - அச்சிடுதல் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பல்வேறு குழுக்கள் மற்றும் சமரத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட திறன் மேம்பாடு பயிற்சித் திட்டங்களின் மூலம் பயிற்சி பெற்றவர்களால் உருவாக்கப்பட்ட கைத்தறி தயாரிப்புகளையும் ஆய்வு செய்தார். நெசவாளர் சேவை மையங்களால் உருவாக்கப்பட்ட மாதிரிகளையும் அவர் பார்வையிட்டார். திறன் மேம்படுத்தல் பயிற்சி திட்டங்கள், பணிமனை, லைட்டிங் பிரிவுகள், நூல் வழங்கும் திட்டம், முத்ரா திட்டம் போன்றவற்றின் நெசவாளர் பயனாளிகளுடனும் கலந்துரையாடினார்.
மேலும், சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். பின்னர் பல்வேறு பிரிவுகளில் 268 மாணவர்களுக்கு பட்டங்களையும் அவர் வழங்கினார். மேலும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும், ரொக்கப் பரிசையும், சான்றிதழ்களையும் மத்திய இணை மந்திரி வழங்கி பாராட்டினார். மேற்கண்ட தகவல்கள் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.