கூடலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா பறவை காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கூடலூர் அருகே காந்திநகரில் முத்துமாரியம்மன் கோவில் விழாவில் ஏராளமான பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update: 2022-04-03 11:23 GMT
கூடலூர்

கூடலூர் அருகே காந்திநகரில் முத்துமாரியம்மன் கோவில் விழாவில் ஏராளமான பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முத்துமாரியம்மன் கோவில் விழா

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி காந்திநகரில் முத்துமாரியம்மன் கோவில் வருடாந்திர தேர்த்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 7 மணிக்கு அம்மன் சிறப்பு ஹோமமும், 8 மணிக்கு கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு ஆற்றங்கரையில் இருந்து அம்மனை குடி அழைத்து ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கே அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியது.

காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன்

அப்போது சின்ன சூண்டி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க பால்குடம், முளைப்பாரி மற்றும் பறவைக் காவடிகள் எடுத்து முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மன், விநாயகர், முருகன், காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார சிறப்பு பூஜை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தேர் கோவிலில் இருந்து முருகன் கோவில், சின்ன சூண்டி, மேட்டூர் நெம்பர் - 1 உள்பட பல இடங்களுக்குச் சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. நேற்று காலை 6  விசேஷ பூஜையும், அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்