பெண் போலீசாருக்கு 9 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம்- கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவிப்பு

‘போக்சோ’ வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்வது தொடர்பாக சென்னை பெண் போலீசாருக்கு 9 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

Update: 2022-04-03 09:51 GMT

பயிற்சி முகாம்

குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் ‘போக்சோ’ வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்வது தொடர்பாக பெண் உதவி போலீஸ் கமிஷனர்கள் இன்ஸ்பெக்டர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

போலீஸ் கமிஷனர் பேச்சு

இந்த முகாமை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது பெண் உதவி கமிஷனர் இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்படுவது போன்று அனைத்து பெண் போலீசாருக்கும் அடுத்த 9 நாட்கள் ‘போக்சோ’ வழக்குகளை திறமையுடன் புலனாய்வு செய்வதற்கான சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். தினமும் 72 பெண் போலீசாருக்கு இப்பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி முகாம்கள் நீதிபதி வக்கீல் சமூக ஆர்வலர்கள் என அனைத்து துறை அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் நடத்தப்படுகிறது. எனவே போலீசார் ‘போக்சோ’ வழக்குகளில் எழும் சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

சென்னையில் அனைத்து பள்ளிகளிலும் ‘போக்சோ’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ‘குட் டச்’ (நல்ல தொடுதல்) ‘பேட் டச்’ (கெட்ட தொடுதல்) உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டுள்ளது. ‘போக்சோ’ வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை

இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியின் டி.லிங்கேஸ்வரன் துணை இயக்குனர் ரிஷிகோஷல் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆதிலட்சுமி லோகநாதன் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு போக்சோ சட்டப்பிரிவுகள் இந்த வழக்குகளின்போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் கோப்புகள் கையாளுதல் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் உள்பட புலனாய்வு முறை குறித்து விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர்கள் டி.எஸ்.அன்பு டாக்டர் என்.கண்ணன் உள்பட போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்