தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்- 300 வாழைகள் நாசம்
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்ததில் 300 வாழைகள் நாசமானது.
தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்ததில் 300 வாழைகள் நாசமானது.
யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, செந்நாய் என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான கோடை வெப்பம் நிலவி வருகிறது. இதனால் குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. நீரோடைகள் காய்ந்து கிடக்கின்றன. தண்ணீரை தேடி யானைகள்அடிக்கடி காட்ைடவிட்டு வெளியேறி விடுகின்றன.
அவ்வாறு வெளியேறும் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து, அங்குள்ள விளைநிலங்களில் இறங்கி பயிர்களை நாசம் செய்கின்றன.
300 வாழைகள்
இந்தநிலையில் தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட எரகனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம்மா (வயது 40). இவர் 2 ஏக்கர் பரப்பளவில் கதலி வாழை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு யானை ரத்தினம்மாவின் தோட்டத்துக்குள் புகுந்து, வாழையை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
யானையின் பிளிறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த பகுதி விவசாயிகள் ஒலி எழுப்பியும், தீப்பந்தம் காட்டியும் அதை விரட்ட முயன்றார்கள். ஆனால் யானை செல்லாமல் தொடர்ந்து வாழைகளை நாசம் செய்தது. நேற்று காலை 6 மணி அளவில் தானாக காட்டுக்குள் சென்றது. யானை மிதித்ததில் சுமார் 300 வாழைகள் நாசமானது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட விவசாயி ரத்தினம்மா கூறும்போது, சேதமடைந்த வாழைகளை கணக்கிட்டு அதிகாரிகள் இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்றார்.