ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கம்பங்கள் ஊர்வலம்- ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் ஊற்றி உற்சாகம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கம்பங்கள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் ஊற்றி உற்சாகமாக கொண்டாடினார்கள்.;

Update:2022-04-03 02:55 IST
ஈரோடு
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கம்பங்கள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் ஊற்றி உற்சாகமாக கொண்டாடினார்கள். 
பெரிய மாரியம்மன் திருவிழா
கொங்கு மண்டலத்தின் குல தெய்வமாக விளங்கும் ஈரோடு பெரிய மாரியம்மன் குண்டம், தேர் மற்றும் பொங்கல் திருவிழா கடந்த மார்ச் 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 19-ந் தேதி கோவிலின் கம்பம் நடப்பட்டது. பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவுடன் வகையறா கோவில்களான காரைவாய்க்கால் மாரியம்மன், சின்னமாரியம்மன் (நடுமாரியம்மன்) கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. தொடர்ந்து 24-ந் தேதி திருவிழா கொடி ஏற்றப்பட்டது.
29-ந் தேதி காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா நடந்தது. பின்னர் 30-ந் தேதி சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் வடம் பிடிக்கப்பட்டது. அன்றைய தினம் பெரிய மாரியம்மன் பொங்கல் விழாவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 31-ந் தேதி தேர் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் தேர் நிலை சேர்ந்தது.
புனித நீர்
நேற்று முன்தினம் திருவிழா காலத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்ற வந்தனர்.
பெரிய மாரியம்மன் கோவிலின் சிறப்பு கம்பத்துக்கு புனித நீர் மற்றும் பால் ஊற்றி பொதுமக்கள் வழிபாடு செய்வது என்பதால் நேற்று கம்பம் பிடுங்கும் நேரம் வரை பக்தர்கள் இடைவிடாமல் புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்தனர்.
கம்பம் பிடுங்கும் விழா
கம்பம் பிடுங்கும் விழா நேற்று நடந்தது. பிற்பகல் 2.30 மணிக்கு கம்பம் பிடுங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. பிற்பகல் 3 மணிக்கு கம்பத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. பெரிய மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் என 3 கோவில்களிலும் ஒரே நேரத்தில் கம்பத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டன. கம்பத்தில் இருந்த அக்னி சட்டி எடுக்கப்பட்டு, கம்பத்தில் கட்டப்பட்டு இருந்த வேப்பிலைகள் அகற்றப்பட்டு புதிதாக மஞ்சள் பூசி வேப்பிலைகள் கட்டப்பட்டன.
பின்னர் பூசாரிகள் கோவிலின் முக்கிய நிர்வாகிகள் இணைந்து கம்பத்தை பிடுங்கினார்கள். அப்போது கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து கம்பங்கள் ஊர்வலம் தொடங்கியது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து கம்பத்தை எடுத்த பூசாரி சுற்றி சுழன்று அருள் வந்து ஆடினார். ஊர்வலம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதிக்கு சென்றது. அங்கிருந்து கம்பம் ஊர்வலம் மணிக்கூண்டை நோக்கி சென்றது. இதுபோல் காரை வாய்க்கால் மற்றும் நடுமாரியம்மன் கோவில்களில் இருந்தும் கம்பங்கள் ஊர்வலம் மணிக்கூண்டு நோக்கி வந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
3 கம்பங்களும் மணிக்கூண்டு பகுதியில் வந்தபோது ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கம்பத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மணிக்கூண்டில் இருந்து ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக வந்த கம்பங்கள் கோவிலின் முன்பு வந்தபோது கம்பத்தை வைத்திருந்தவர்கள் அருள்வந்து ஆடினார்கள்.
அங்கிருந்து காமராஜ் வீதி வழியாக பிரப் ரோடு (மீனாட்சி சுந்தரம் சாலை) வழியாக அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதிக்கு கம்பங்கள் வந்தன. அங்கும் 3 கம்பங்கள் வைத்திருந்த பூசாரிகள் அருள் வந்து ஆடினார்கள். மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர், சத்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில் வழியாக மீண்டும் 3 கம்பங்களும் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, காரைவாய்க்காலில் 3 கம்பங்களும் போடப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் பரவல் காரணமாக பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு விழா நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கம்பம் ஊர்வலம் நடைபெற்றது. 
உப்பு-மிளகு
கம்பம் சென்ற வழி நெடுகிலும் பக்தர்கள் கம்பத்தை வரவேற்கும் வகையில் சாலைகளில் மஞ்சள்நீர் ஊற்றியும், பூஜை பொருட்கள் வைத்தும் வழிபட்டனர். கம்பத்தை பார்க்கவும் வழிபடவும் ஏராளமான பக்தர்கள் சாலைகளின் 2 பக்கங்களிலும் கூடி நின்று கம்பத்தின் மீது உப்பு மற்றும் மிளகு வீசினார்கள். கம்பத்தை சுமந்து சென்ற பூசாரிகள் உடன் சென்ற பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் உடல் முழுவதும் உப்பு விழுந்தது.
ஊர்வலத்தில் கிராமப்புற கலைஞர்கள் கடவுள்களின் வேடத்தில் வந்து கலந்து கொண்டார்கள். பக்தர்கள் சிலர் முகத்தில் பல வர்ணங்கள் பூசி  வந்தனர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கடவுள் வேடமிட்டு அழைத்து வந்தனர். ஊர்வலம் முடிந்து சாலைகளை பார்த்தபோது உப்பு சாலையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்டது.
மஞ்சள் நீராட்டு
கம்பம் விழாவையொட்டி மதியம் 1.30 மணி அளவில் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் வீடுகளில் உள்ள சிறுவர்கள் மஞ்சள் நீரை தங்களுக்குள் ஊற்றி உற்சாகமாக கொண்டாட்டத்தை தொடங்கினர். அதைத்தொடர்ந்து கம்பம் பிடுங்கும் நேரம் நெருங்க நெருங்க ஈரோடு நகரின் பல பகுதிகளிலும் மஞ்சள் நீராட்டு விழா உற்சாகமாக களை கட்ட தொடங்கியது.
ஈஸ்வரன்கோவில் சுற்று வட்டார பகுதிகள், பெருமாள் கோவில் வீதி, காமராஜ் வீதி, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, மார்க்கெட் வீதி, எஸ்.கே.சி. ரோடு, மேட்டூர் ரோடு, முனிசிபல் காலனி, திரு.வி.க. ரோடு, சுவஸ்திக் கார்னர், சத்தி ரோடு, பெரியார் நகர், தில்லை நகர், முனியப்பன்கோவில் வீதி, சேட் காலனி, கோட்டை நேரு வீதி, கச்சேரி வீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் நீராட்டு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மஞ்சளை தண்ணீரில் கரைத்து தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவர் மீதும் ஊற்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக விளையாடினார்கள். ஆண்களும், பெண்களும், இளைஞர்கள், இளம்பெண்கள் மஞ்சள் நீராடி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். மஞ்சள் பொடியை முகம் முழுவதும் பூசியும், மஞ்சள் பொட்டு வைத்தும் கொண்டாடினார்கள். இதனால் வீதிகள் மஞ்சள் நீர் வீதிகளாக மாறின.
பாதுகாப்பு
கம்பம் பிடுங்கும் விழா, மஞ்சள் நீர் விழாவையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் முக்கிய வீதிகளில் பக்தர்கள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நீர் மோர் பந்தல், கூழ் வழங்கும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. கச்சேரி வீதி, சுவஸ்திக் கார்னர், ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, காமராஜ் வீதி பகுதிகளில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. ரோஸ் மில்க், ஐஸ்கிரீம் ஆகியவற்றையும் சிலர் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினார்கள். கம்பம் ஊர்வலத்தின் முன்பு வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.
விழாவையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜானகிராமன், கனகேஸ்வரி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆனந்தகுமார், சண்முகம், இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், தெய்வராணி மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி அளவில் கோவிலில் நடைபெறும் மறுபூஜையுடன் இந்த ஆண்டுக்கான பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவுபெறுகிறது. 

மேலும் செய்திகள்