2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய ஈரோடு
2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது.
ஈரோடு
2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது.
பெருந்தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி தாய்லாந்து நாட்டை சேர்ந்த 2 பேருக்கு முதல் முதலாக கொரோனா தொற்று உறுதியானது. அதன்பிறகு ஒருசிலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டதால், சில நாட்களில் தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது. ஆனால் மீண்டும் தொற்று பரவல் வேகமெடுத்தது. கொரோனா 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3-வது அலை மீண்டும் பரவியது.
கொரோனா இல்லாத மாவட்டம்
பொதுமக்கள் பலர் ஆர்வமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதன் காரணமாக 3-வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் அமைதியாக ஓய்ந்தது. கடந்த மாதம் 15-ந் தேதி யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதன்பிறகு ஒருவர் அல்லது 2 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக யாருக்கும் புதிய தொற்று ஏற்படவில்லை.
இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒரே ஒரு நபரும் நேற்று குணமடைந்தார். இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதில்1 லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.