மது, கஞ்சா விற்ற 6 பேர் கைது
நெல்லையில் மது, கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் முறைகேடாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாளையங்கோட்டை இயற்பகை நாயனார் தெருவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மூளிக்குளத்தை சேர்ந்த முருகனை (வயது 53) போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்கள் மற்றும் ரூ260-ஐ பறிமுதல் செய்தார்கள்.
இதேபோன்று நெல்லை சந்திப்பு பகுதியில் மது விற்பனை செய்த மலையன்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (43) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் ரூ,100-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் தச்சநல்லூர் புது பாலம் அருகே மது விற்பனை செய்த பேட்டை நெல்லையாபுரம் தெருவை சேர்ந்த கண்ணனை (48) கைது செய்து, அவரிடம் இருந்த 14 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.100-ஐ பறிமுதல் செய்தனர்.
மேலும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி. சுரேஷ்குமார் உத்தரவின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் தச்சநல்லூர் ரவுண்டானா அருகே ரோந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் (22) என்பவரை சோதனையிட்டதில் வாகனத்தில் மறைத்து வைத்திருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
இதேபோல் பேட்டை சத்யாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தங்கராஜ் (44) என்பவரிடமிருந்து சுமார் 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ரூ 3,500 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வீரமாணிக்கபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த மகேஷ் (30) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தார்கள்.