காரை விற்பதாக வாட்ஸ்-அப்பில் தெரிவித்து பலசரக்கு வியாபாரியிடம் ரூ.2 லட்சம் மோசடி
காரைக்குடியை சேர்ந்த பலசரக்கு கடை உரிமையாளரிடம் கார் விலைக்கு தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;
சிவகங்கை
காரைக்குடியை சேர்ந்த பலசரக்கு கடை உரிமையாளரிடம் கார் விலைக்கு தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ரூ.2 லட்சம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் அழகுசுந்தரம் (வயது 43). இவர் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 29-ந் தேதி இவருடைய செல்போன் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்ட ஒருவர் தன்னுடைய காரை விற்பனை செய்யப் போவதாக தெரிவித்தார். அதன் படத்தையும் போட்டிருந்தார். அந்த காரின் விலை ரூ.2 லட்சம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து அழகுசுந்தரம் அந்த காரை வாங்குவதற்காக ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 710ஐ செலுத்தியுள்ளார் இந்த பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அந்த நபர் இவருடைய தொடர்பை துண்டித்து விட்டாராம்.
புகார்
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அழகுசுந்தரம் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார்.
அவருடைய உத்தரவின் பெயரில் சிவகங்கை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி, ஏட்டுகள் ஸ்ரீதர், வினோத்குமார் ஆகியோர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.