தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்; காவலாளி உடல் கருகினார்

தொழில் அதிபர் வீட்டில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதில் இரவு நேர காவலாளி உடல்கருகி படுகாயம் அடைந்தார். மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் 3 கடைகளையும் சூறையாடினர்

Update: 2022-04-02 19:58 GMT
தேவகோட்டை
தொழில் அதிபர் வீட்டில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதில் இரவு நேர காவலாளி உடல்கருகி படுகாயம் அடைந்தார். மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் 3 கடைகளையும் சூறையாடினர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வலனை முத்துபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் வட்டப்பன்(வயது 58). இவர் பகலில் தேவகோட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்துவிட்டு, இரவு நேரத்தில் தேவகோட்டை கருதா ஊருணி பகுதியில் உள்ள ஒரு தொழில் அதிபர் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் வட்டப்பன் அந்த வீட்டில் இரவு காவல் பணியில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த சிலர் அந்த வீட்டின் வாசலில் கூட்டமாக நின்று மது குடித்துள்ளனர். இதை பார்த்த வட்டப்பன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். சிறிதுநேரத்தில் திரும்பி வந்து பெட்ரோல் குண்டை எடுத்து அந்த தொழில் அதிபர் வீட்டின் முகப்பு பகுதியில் வீசிவிட்டு தப்பினர்.
காவலாளி படுகாயம்
இதில் காவலாளி வட்டப்பன் மீது அந்த பெட்ரோல் குண்டு பட்டு தீப்பிடித்தது. இதில் அவர் உடல்கருகி பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அப்பகுதியில் இருந்த 3 கடைகளை உடைத்து சூறையாடி, அங்கிருந்த குளிர்பானங்களையும் திருடிச் சென்றனர். 
இச்சம்பவம் குறித்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசி, கடைகளை சூறையாடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்