மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் டிரோன் கேமரா மூலம் சிக்கினர்

கடையநல்லூர் அருகே போலீசாரின் அதிரடி நடவடிக்கையாக மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் டிரோன் கேமரா மூலம் சிக்கினர்.

Update: 2022-04-02 19:51 GMT
 அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே போலீசாரின் அதிரடி நடவடிக்கையாக மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் டிரோன் கேமரா மூலம் சிக்கினர்.

மணல் திருட்டு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருேக சிங்கிலிபட்டி பெரிய பாலம் அருகில் நேற்று முன்தினம் சிலர் முறைகேடாக மணல் திருட்டில் ஈடுபடுவதாக சொக்கம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார், மணல் திருடும் கும்பலை கூண்டோடு கையும் களவுமாக பிடிப்பதற்கு அதிரடி நடவடிக்கையாக, அப்பகுதியில் டிரோன் கேமராவை இயக்கி, அதில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.

அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் 2 லாரிகளில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த கும்பலை சுற்றி வளைத்து 2 பேரை மடக்கி பிடித்தனர். எனினும் பொக்லைன் ஆபரேட்டர் தப்பி ஓடி விட்டார்.

2 பேர் கைது

போலீசாரிடம் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் அதே ஊரில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 29), இந்திரா காலனியைச் சேர்ந்த திருமலைவேலு மகன் ஜோதிராஜ் (32) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மணல் திருட்டுக்கு பயன்படுத்திய 2 லாரிகள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவான பொக்லைன் ஆபரேட்டர் மற்றும் லாரிகளின் உரிமையாளர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்