ரெயிலில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயிலில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும்் ஒடிசா மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-02 19:16 GMT
ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயிலில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும்் ஒடிசா மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சோதனை

தமிழகத்திற்கு வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் உள்ளூர் போலீசார் மட்டுமின்றி கலால் போலீசார், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆகியோர் தனிப்படை அமைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்துபவர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர். 

அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதை கண்காணித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜோலார்பேட்டை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், அருண்குமார், சித்திரவேல் உள்ளிட்ட போலீசார் ஜோலார்பேட்டை மார்க்கமாக வரும் ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

10 கிலோ கஞ்சா பறிமுதல்

அப்போது தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புலா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். முன்பதிவு செய்யப்பட்ட டி4 பெட்டியில் சோதனை செய்தபோது போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியை சேர்ந்த ரதன் ஷட்ரா என்பவரின் மகன் பசன்ட் ஷட்ரா (வயது 25) என்பதும், இவர் ரெயில் மூலம் 6 கிலோ கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து ரெயில்வே தனிப்படை போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 
மேலும் இதே எக்ஸ்பிரஸ் ரெயிலில் சேலம் தனிப்படை பிரிவினர் ஆம்பூர் ரெயில் நிலையம் அருகே முன் பதிவு செய்யப்பட்ட டி.எல். 2 பெட்டியில் பயணிகளின் இருக்கையின் அடியில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 10 கிலோ கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட  பசன்ட் ஷட்ராவை ரெயில்வே போலீசார் வேலூர் போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்