ஒரே நாளில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வேலூர்
தமிழகம் முழுவதும் 27-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்பட 505 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
குறிப்பாக 2-வது தவணை கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி அதிகம் நபர்கள் போட்டு கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த சிறப்பு முகாம்களை சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி மற்றும் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரேநாளில் 18,904 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.