திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவாடானையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

Update: 2022-04-02 18:54 GMT
தொண்டி
திருவாடானையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில்  பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி உற்சவ திருவிழா 
திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சிநேகவள்ளி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோவிலின் உப கோவிலான திரவுபதி அம்மன் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. தினமும் அம்மனுக்கு அபிசேகம், தீபாராதனை மற்றும் மகாபாரதம் படிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அர்ச்சுனர், பாஞ்சாலி திருக்கல்யாணம் வீமன், பேராண்டி வேடம் அணிந்து பக்தர்கள் வீதி உலா, காளி வேடம் அணிந்து அரவானை பலியிடுதல், திரவுபதி அம்மன் பேய் விரட்டும் நிகழ்ச்சி, துச்சாதனனை வதம் செய்தல், படுகளம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மேலும் ஏராளமானவர்கள் தீ பந்தத்தை வைத்து சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர்.
திருவிழா நிறைவு நாளன்று விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் ஊர்வலமாக வலம் வந்து கோவிலின் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து கொடி இறக்குதல் மற்றும் கமலி பூஜையும், சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. பூஜைகளை சிநேகவல்லை அம்மன் கோவில் குருக்கள் ரவி, கோவில் பூசாரிகள் நடத்தினர்.  
அன்னதானம்
இதில் தேவஸ்தான சரக செயல் அலுவலர் மற்றும் தேவஸ்தான பணியாளர்கள் விழா கமிட்டியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையொட்டி அன்னதானம் மகாபாரத கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாடானை சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆசிரியர்கள் செல்வி, முத்துராஜா, சித்ரா ஆகியோர் நாட்கள் மகாபாரதம் படித்தனர்.
நிகழ்ச்சிகளை விழா ஒருங்கிணைப்பு குழு ஆனந்த், சந்திரசேகர், முத்துராஜா மற்றும் வடக்குத்தெரு கிழக்கு தெரு பொதுமக்கள், இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்