குளித்தலை-மணப்பாறை சாலையில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

குளித்தலை-மணப்பாறை சாலையில் கூடுதல் பஸ் இயக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-04-02 18:47 GMT
தோகைமலை, 
பெட்ரோல்- டீசல் விலை உயர்வு
தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்சமயம் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் தங்களுடைய இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை வீட்டிலேயே நிறுத்திவிட்டு அரசு பஸ்களில் பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.
குளித்தலை-மணப்பாறை சாலையில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை போதிய அளவில் பஸ் வசதி இல்லாததால் கரூர், மணப்பாறை, முசிறி ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் மற்றும்  பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக வெகுநேரம் காத்து நிற்கிறார்கள்.
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
மேலும் அந்த வழியாக செல்லும் பஸ்களில் போட்டிப்போட்டு ஏறி செல்கிறார்கள். கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கிறார்கள். பஸ் நடத்துனர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகளிடம் பயணச்சீட்டை வழங்க முடியாமல் திணறியும், படியில் தொங்கி வருபவர்கள் மீது கவனம் செலுத்த முடியாமலும் தவித்து வருகிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குளித்தலை-மணப்பாறை சாலையில் கூடுதல் பஸ்களை இயக்குவதுடன் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்