திருச்செங்கோட்டில் வங்கி துணை மேலாளர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

திருச்செங்கோட்டில் வங்கி துணை மேலாளர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

Update: 2022-04-02 18:45 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் வங்கி துணை மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வங்கி துணை மேலாளர்
ஈரோடு மாவட்டம் சித்தோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷன் (வயது 31). திருச்செங்கோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் துணை மேலாளராக பணியாற்றினார். இவருடைய மனைவி சவுமியா (26). இவர்களுக்கு ரியா (3) என்ற மகள் உள்ளாள். இவர்கள் திருச்செங்கோடு ராஜீவ் நகரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் வேலைக்கு சென்ற அவர் மதியம் வீடு திரும்பினார். பின்னர் தனக்கு உடல் சோர்வாக உள்ளதாக கூறி படுக்கைக்கு சென்றவர் மாலை தனது மனைவியிடம் தான் விஷம் குடித்து விட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சவுமியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார். 
விசாரணை
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பிரியதர்ஷனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இதுகுறித்து சவுமியா திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் வங்கியில் வேலை சுமை அதிகமாக உள்ளது என பலமுறை கூறியதாக தெரிவித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷன் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி துணை மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்