மணல், கஞ்சா உள்ளிட்டவை கடத்தியதாக 1,273 பேர் கைது

வேலூர் மாவட்டத்தில் மணல், கஞ்சா, சாராயம் உள்ளிட்டவை கடத்தியதாக 1,273 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-02 18:29 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மணல், கஞ்சா, சாராயம் உள்ளிட்டவை கடத்தியதாக 1,273 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மணல் கடத்தல்

வேலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக சாராயம், கஞ்சா, குட்கா, மணல் கடத்தல் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 3 மாதங்களில் சாராயம், மதுவிலக்கு தொடர்பாக மொத்தம் 1,048 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 951 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 9,374 லிட்டர் சாராயமும் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட 145 கிலோ கிராம் வெல்லம் மற்றும் 43,300 லிட்டர் சாராய ஊறல்களையும், 6,425 மதுபான பாட்டில்களையும் கைப்பற்றி அழிக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மணல் கடத்திய 136 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொத்தம் 118 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கஞ்சா தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டு கஞ்சா விற்பனையை பிரதான தொழிலாகக்கொண்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5,24,400 ஆகும். 

குட்கா தொடர்பான வழக்கில் 160 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1,292 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.8,93,377 ஆகும்.

கடுமையான நடவடிக்கை

தடை செய்யப்பட்ட லாட்டரி தொடர்பாக மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.5,210 கைப்பற்றப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் யார் என அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்