மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 637 பேருக்கு இ.எஸ்.ஐ. அடையாள அட்டை;கலெக்டர் அரவிந்த் வழங்கினார்
நாகர்கோவில் மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் 637 பேருக்கு இ.எஸ்.ஐ. அடையாள அட்டைகளை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் 637 பேருக்கு இ.எஸ்.ஐ. அடையாள அட்டைகளை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
அறிவுறுத்தல்
குமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி அன்று தேசிய துப்புரவு தொழிலாளர் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) விவரங்கள் அடங்கிய ரசீது மற்றும் தொழிலாளர் மாநில காப்பீடு (இ.எஸ்.ஐ.) அடையாள அட்டை ஒவ்வொருவருக்கும் வழங்கிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாநகராட்சியில் பணிபுரியும் 637 தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) மற்றும் தொழிலாளர் மாநில காப்பீடு (இ.எஸ்.ஐ.) அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இ.எஸ்.ஐ. அடையாள அட்டை
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ரசீது, தொழிலாளர் மாநில காப்பீட்டு அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாநகர் நல அதிகாரி விஜய் சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.