ஊராட்சி நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகளின் கணவர் தலையிட்டால் கடும் நடவடிக்கை
ஊராட்சி நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகளின் கணவர் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
.தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் கிராம ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் அதிகாரங்கள், கடமைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி தலைவருக்கு ஊராட்சியின் தலைவர் என்ற பொறுப்போடு அந்த கிராம ஊராட்சியின் செயல் அலுவலர் என்ற பொறுப்பையும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தல் மூலம் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமானோர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் புதியவர்களாக இருக்கின்றனர்.
புகார்கள்
இதன் காரணமாக ஊராட்சி நிர்வாகத்தில் அவர்களின் பொறுப்புகள், கடமைகள் மற்றும் மத்திய, மாநில அரசு திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் ஒரு சில ஊராட்சி அமைப்புகளில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர், சகோதரர், தந்தை மற்றும் இதர உறவினர்களின் குறுக்கீடுகள் ஊராட்சி நிர்வாகத்தில் அதிக அளவில் இருப்பாதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பெற்றுள்ளது.
குறிப்பாக ஒரு சில நிகழ்வுகளில் பெண் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள நிர்வாக அமைப்பில் அவர்களது கணவர் மற்றும் சகோதரர், தந்தை மற்றும் இதர உறவினர்கள் ஊராட்சி நிதி நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது.
எனவே பெண் ஊராட்சி மன்ற தலைவர்களாக உள்ள உள்ளாட்சி நிர்வாக அமைப்பில் அவர்களது கணவர், தந்தை, சகோதாரர் மற்றும் இதர உறவினர்களின் தலையீடுகள் இருப்பது என்பது சட்டத்திற்கு புறம்பானவை என்பதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 73-வது சட்டத்திருத்தம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அதிகார பகிர்வுகளை அவமதிக்கத்தக்க செயலாகும்.
நடவடிக்கை
எனவே இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது ஊராட்சிகள் சட்டம் 1994-ல் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் ஊராட்சி மன்ற குழுக்கூட்டங்களில் பெண் பிரதிநிதிகளின் கணவர் அல்லது உறவினர்கள் கலந்து கொண்டதாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் மன்ற குழுக்கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.