குழந்தைகளின் உயிருடன் விளையாடாதீர்கள்

பள்ளிக்குழந்தைகளின் உயிருடன் விளையாடாதீர்கள் என்று போக்குவரத்து ஆணையர் தனியார் பள்ளி வாகன டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-04-02 17:54 GMT
தாராபுரம்
பள்ளிக்குழந்தைகளின் உயிருடன் விளையாடாதீர்கள் என்று போக்குவரத்து ஆணையர் தனியார் பள்ளி வாகன டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
124 பள்ளி வாகனங்கள் ஆய்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில்  பள்ளி வாகன சிறப்பு ஆய்வு நேற்று தாராபுரத்தில் நடைபெற்றது. ஆய்வில் போக்குவரத்து ஆணையர் எஸ்.நடராஜன் தலைமையில் கோவை சரகத்திற்கு உட்பட்ட கோவை சரக போக்குவரத்து இணை ஆணையர்கள் உமாசக்தி, வெங்கட்ராமன் ஆகியோர் மேற்பார்வையில் தாராபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட 23 தனியார் பள்ளிகளிலிருந்து 124 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அப்போது 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 11 பேர் கொண்ட குழுவினர் தலைமையில் 20- மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலந்து கொண்டு வாகனங்களை பரிசோதனை செய்தனர்.  பிறகு வாகன ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
கதவுகள் இயங்கவில்லை
ஆய்வாளர்கள் ஆய்வின் அறிக்கை குறித்து போக்குவரத்து ஆணையர் எஸ்.நடராஜன்  ஆய்வு கூட்டத்தில் கூறியதாவது:- 
பள்ளிக்கு செல்லும் 6 வயது முதல் 12 வயது வரை உள்ள மாணவர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள் அவர்களை வாகனத்தில் ஏற்றும் போதும், இறக்கிவிட போதும்பஸ்சில் வரும் உதவியாளர்கள் மிக உண்ணிப்பாக கவனிக்க வேண்டும். அத்துடன் பள்ளி வாகனம் முறையாக பராமரிக்கப்படாமல் டிரைவர்கள் கவனக்குறைவு அதிகமாக உள்ளது. இந்த குறைகளை டிரைவர்கள்தான் தான் பள்ளி நிர்வாகத்திற்கு எடுத்துக்கூற வேண்டும். மேலும் பள்ளி வாகனத்தில் உள்ள ஓட்டைகளில் தகரம் கொண்டு அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவசர காலத்திற்கு வெளியேறும் கதவுகள் பெரும்பாலான பள்ளி வாகனங்களில் இயங்கவில்லை.
பல்வேறு குறைகள்
பஸ் டிரைவர் அமர்ந்து சாலையை பார்த்து ஓட்டும் அளவிற்கு முன்பக்கம் கண்ணாடியில் ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ளனர்.அதனை உடனடியாக அகற்ற வேண்டும். இது போன்று பல்வேறு குறைகள் நிறைந்த பஸ்களை இயக்குவது பள்ளி குழந்தைகளின் உயிருடன் விளையாடுவதற்கு சமமாகும்.எனவே குறைபாடுகள் உள்ள வாகனங்களை இயக்காதீர்கள்.
இவ்வாறு ஆணையர் கூறினார்.
ஆய்வின்போது தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில்குமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, டி.ஆர்.ஓ.ஜெய்பீம், ஆர்.டி.ஓ குமரேசன், வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் ஜெ.செந்தில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்