புதுக்கோட்டை நகராட்சியில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மும்முரம்

புதுக்கோட்டை நகராட்சியில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றது.

Update: 2022-04-02 17:33 GMT
புதுக்கோட்டை:
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுக்கோட்டை நகராட்சியில் நீர்நிலை புறம்போக்கு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை யானைமால் தெருவில் உள்ள சேர்வராயன்குளத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இதனை கலெக்டர் கவிதாராமு பார்வையிட்டார். 
இதேபோல கோவில்பட்டியில் உள்ள சுப்பம்மாள் சமுத்திரம், சந்தைப்பேட்டை அருகில் உள்ள அக்கச்சியாகுளம், ராஜகோபாலபுரம் காக்காச்சி ஊரணி, பழைய பஸ் நிலையத்தில் உள்ள குமுந்தான்குளம் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 
நடவடிக்கை 
அதன்பின் அவர் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தடை செய்யும் நபர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றிட தவறும் பட்சத்தில் அரசே தாமாக முன்வந்து அகற்றி, அதற்குரிய செலவினங்கள் வசூலிக்கப்படும்’’ என்றார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன், நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்