சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்த மரங்கள்
உடுமலை பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் வேருடன் சாய்ந்த நிலையில் சேதம் குறித்து வேளாண்மைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் வேருடன் சாய்ந்த நிலையில் சேதம் குறித்து வேளாண்மைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
ஆலங்கட்டி மழை
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழையும், அதனைத் தொடர்ந்து கன மழையும் பெய்தது. இதனால் கோடை வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் சூறாவளிக் காற்றால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் வீசிய காற்றால் வாழை, பப்பாளி, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமின்றி் பல இடங்களில் காய்ப்பு நிலையிலுள்ள தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தும் ஒடிந்தும் விழுந்துள்ளன.
கள ஆய்வு
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேற்று வேளாண்துறையினர் நேரடியாக கள ஆய்வு செய்தனர். இதுகுறித்து வேளாண்துறையினர் கூறுகையில், பயிர் சேதம் குறித்து கிராமப் பகுதிகளுக்கு சென்று நேரடியாக கள ஆய்வு செய்து வருகிறோம். 24 மணி நேரத்துக்குள் மாவட்ட பேரிடர் நிவாரணத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். தற்போது சின்ன குமாரபாளையம் பகுதியில் 19 விவசாயிகள், வெங்கிட்டாபுரத்தில் 12 பேர், லிங்கமாவூரில் 13 பேர், ஜல்லிப்பட்டியில் 11 பேர், மானுப்பட்டியில் 19 பேர் உள்பட பயிர் சேதம் குறித்து வேளாண்துறைக்கு தகவல் தெரிவித்ததால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் தொடர்ச்சியாக பயிர் சேதம் குறித்து விவசாயிகள் தகவல் தெரிவித்து வருகிறார்கள். முழுமையான கணக்கெடுப்புக்குப் பிறகே சேத மதிப்பு குறித்து தெரிய வரும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்படும். அரசு நிதி ஒதுக்குவதைப் பொறுத்து இழப்பீடு கிடைக்கும் என்று கூறினர்.
கூடுதல் அவகாசம்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களும் அரசு விடுமுறை தினங்களாகும். இதனால் சூறாவளிக் காற்றால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றனர்.