தகராறில் முதியவர் கொலை
திருவிடைமருதூரில் நடந்த தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
திருவிடைமருதூர்;
திருவிடைமருதூரில் நடந்த தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பண தகராறு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவில் சன்னாபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது70). இவர் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன் (59) என்பவருடைய மகள் திருமணத்துக்காக திருவிடைமருதூரில் உள்ள பாத்திரக்கடையில் 1½ ஆண்டுக்கு முன்பு ரூ.80 ஆயிரத்துக்கு சீர்வரிசை பாத்திரங்களை கடனாக வாங்கி கொடுத்துள்ளார்.
அதில் ரூ.20 ஆயிரம் பாக்கி இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன், ராஜேந்திரனிடம், பாத்திரகடை பாக்கியை உடனடியாக கொடுக்குமாறு கூறினார்.
அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கணேசனை ராஜேந்திரன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், கணேசனை கீழே தள்ளினார்.
கைது
அதில் மயக்கம் அடைந்த கணேசனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கணேசனின் சகோதரர் அன்பழகன் திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருவிடைமருதூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.