கும்பகோணம் பகுதியில் ‘திடீர்’ மழை
கும்பகோணம் பகுதியில் நேற்று மதியம் திடீரென பெய்த மிதமான மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கும்பகோணம்:-
கும்பகோணம் பகுதியில் நேற்று மதியம் திடீரென பெய்த மிதமான மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுட்டெரித்த வெயில்
கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர். வெப்பம் காரணமாக நகரின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பல்வேறு இடங்களில் மோட்டார் பம்புகள், குடிநீர் குழாய்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் கும்பகோணம் பகுதியில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு நகரமே இருளில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
பரவலாக மழை
நகரம் முழுவதும் பரவலாக சுமார் அரை மணி நேரம் பெய்த அடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்த மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடந்த பல நாட்களாக நிலவிய வெப்பத்திற்கு இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்ததாகவும், வெயிலின் தாக்கத்தை மழை தணித்துள்ளதாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நேற்று பெய்த மழையின் காரணமாக கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் கோடை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.