காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-02 16:59 GMT
விழுப்புரம், 

பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும் நேற்று மாலை விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். நகர தலைவர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜ்குமார், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியவாறு கண்டன கோஷம் எழுப்பினர்.

மேலும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு திடீரென அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் காஜாமொய்தீன், மாவட்ட துணைதலைவர்கள் குப்பன், நேமூர் துரை, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சேகர், ராஜேஷ், ரங்கன், வளவனூர் பேரூர் கழக தலைவர் அண்ணாமலை, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம், ஒன்றிய கவுன்சிலர் வேலு, மாவட்ட செய்தி தொடர்பாளர் அகமது, இளைஞர் காங்கிரஸ் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முகமதுஅலி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்அவர்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்