ராமநத்தம் அருகே பரபரப்பு கரும்பு ஏற்றி வந்த லாரியை மறித்து கிராம மக்கள் திடீர் போராட்டம் மின்ஒயர்கள் அறுந்து விழுந்ததால் ஆத்திரம்
ராமநத்தம் அருகே மின் ஒயர்கள் அறுந்து விழுந்ததால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் கரும்பு ஏற்றி வந்த லாரியை திடீரென வழிமறித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராமநத்தம்
கரும்பு ஏற்றி வந்த லாரி
ராமநத்தம் அடுத்துள்ள தொழுதூரில் கரும்பு ஏற்றிச்செல்லும் லாரி மற்றும் டிராக்டர்களால் தினமும் மின் கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் ஒயர்கள் அறுந்து விழுவதால் மின்சாரம் தடை பட்டு கிராமமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் கீழகல்பூண்டி பகுதியில் இருந்து கரும்பு ஏற்றிய லாரி ஒன்று ராமநத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தது. தொழுதூரில் வந்தபோது மின்கம்பத்தில் இருந்து சாலையின் குறுக்காக வீடுகளுக்கு செல்லும் மின் ஒயர்கள் மீது அந்த லாரி மோதியது. இதில் 3 வீடுகளின் மின் ஒயர்கள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தடை ஏற்பட்டது.
கிராமமக்கள் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென அந்த லாரியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமநத்தம்-ஆத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து கிராமமக்கள் கூறும்போது, சாலை உயர்த்தி அமைக்கப்பட்டதால் மின் கம்பங்கள் உள்ள பகுதி பள்ளமாகி விட்டது. இதனால் சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் ஒயர்கள் மீது கரும்பு ஏற்றி வரும் லாரி மற்றும் டிராக்டர்கள் அவ்வப்போது மோதுவதால் மின் ஒயர்கள் அறுந்த விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். இதை சரிசெய்து தரக்கோரி மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தற்போது வெயில் காலம் என்பதால் மின் ஒயர்கள் அறுந்து விழுவதால் மின்சாரம் தடை ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருகிறோம் என்றனர்.
பரபரப்பு
பின்னர் கரும்பு ஏற்றி வந்த லாரியின் டிரைவர் மற்றும் கரும்பின் உரிமையாளர் ஆகியோர் அறுந்து விழுந்த மின் ஒயர்களை சரிசெய்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.