வால்பாறையில் குவிய தொடங்கிய சுற்றுலா பயணிகள்
கோடை சீசனை அனுபவிக்க வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். இதனால் அங்கு நுங்கு, தர்பூசணி வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.
வால்பாறை
கோடை சீசனை அனுபவிக்க வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். இதனால் அங்கு நுங்கு, தர்பூசணி வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.
கோடை மழை
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதை காண சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்கு கடந்த மாதம் 18-ந் தேதி முதல் பரவலாக கோடைமழை பெய்து வருகிறது. ஒருசில நேரங்களில் கனமழையாகவும், பெரும்பாலான நேரங்களில் மிதமான மழையாகவும் பொழிகிறது.
ஆனால் சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வால்பாறை பகுதியில் கோடை சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி உள்ளனர். மேலும் நுங்கு, தர்பூசணி விற்பனை சூடுபிடித்து வருகிறது.
சிறப்பு பஸ்கள்
பகலில் சற்று வெயில் அடித்தாலும், மாலையில் குளிர்ந்த காலநிலை உள்ளதால் சுற்றுலா பயணிகள் குதூகலமடைகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என்றும், கோடைக்கால சுற்றுலாவாக டாப்சிலிப், ஆழியாறு, வால்பாறை பகுதியை இணைக்கும் வகையில் சிறப்பு சுற்றுலா வாகன வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வால்பாறை பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.