கடைகளை ஏலம் விடுவது தொடர்பாக வியாபாரிகளை அழைத்து பேச வேண்டும்

கடைகளை ஏலம் விடுவது தொடர்பாக வியாபாரிகளை அழைத்து பேச வேண்டும் என்று நகராட்சி தலைவரிடம், கூட்டமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-04-02 16:47 GMT
வால்பாறை

கடைகளை ஏலம் விடுவது தொடர்பாக வியாபாரிகளை அழைத்து பேச வேண்டும் என்று நகராட்சி தலைவரிடம், கூட்டமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். 

வாடகை பிரச்சினை

வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:- வால்பாறை நகராட்சி கடை வாடகை பிரச்சினை குறித்து உரிய ஆலோசனை நடத்தி கடைக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடை வாடகையை கட்டாதவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக செலுத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில் நகராட்சி கடைகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகிறது. கொரோனா பரவலால் வால்பாறை பகுதி வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் சிரமத்தை சந்தித்தோம். வங்கிகளில் வாங்கிய கடனைக்கூட கட்ட முடியவில்லை. குழந்தைகளுக்கு பள்ளி கட்டணங்களை கூட கட்டமுடியாத நிலையில் உள்ளோம். 

வாகன நிறுத்துமிடம்

தற்போது நகராட்சி கடை வாடகை பிரச்சினையில் கால அவகாசத்தை நீட்டித்து தராமல் கொஞ்சம் கொஞ்சமாக கடை வாடகையை கட்டி வரும் நிலையில் கடைகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுத்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே நகராட்சி கடை வாடகை பிரச்சினை சம்மந்தமாக  கடைக்காரர்களை அழைத்து பேசி முடிவெடுக்க வேண்டும். 

வருகிற கோடைகாலம் வால்பாறை பகுதிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய காலம் ஆகும். எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்களை நிறுத்த இடம் அமைத்து தர வேண்டும். படகு இல்லம், தாவரவியல் பூங்கா திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதையடுத்து அந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்