சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீ மிதி விழா

சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீ மிதி விழா

Update: 2022-04-02 16:44 GMT
பொறையாறு;
செம்பனார்கோவில் அருகே கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 18-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதல் விழா நடந்தது. அதனைத்தொடர்ந்து 25-ந் தேதி கொடியேற்று விழா மற்றும் அம்மன் புஷ்பக விமானத்தில் வீதிஉலாவும், 31-ந்‌ தேதி காத்தவராய சாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு பால், தேன், சந்தனம், பன்னீர், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள், அங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து அலகு காவடி, கரகம் மற்றும் பால் குடங்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து தீக்குண்டம் முன்பு எழுந்தருளிய சீதளாதேவி மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டமும், அரிச்சந்திரா நாடகமும் நடந்தது. முன்னதாக பெண்கள் மாவிளக்கு மற்றும் திருவிளக்கு பூஜை நடத்தினர். இரவு அம்மன் வீதிஉலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தருமபுர  ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்