காட்சிப்பொருளாக உள்ள உயர் கோபுர மின்விளக்கு ஒளிருமா?

வாழ்மங்கலத்தில் காட்சிப்பொருளாக உள்ள உயர் கோபுர மின்விளக்கு ஒளிருமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-04-02 16:42 GMT
திட்டச்சேரி:
வாழ்மங்கலத்தில் காட்சிப்பொருளாக உள்ள உயர் கோபுர மின்விளக்கு ஒளிருமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உயர் கோபுர மின்விளக்கு
திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராம நிர்வாக அலுவலக வாசலில் உயர் கோபுர மின் விளக்கு அமைந்துள்ளது. இந்த உயர் கோபுர மின்விளக்கு நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2013 -14-ம் நிதியாண்டில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. 
வாழ்மங்கலம், அகரக்கொந்தகை, கொத்தமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வர வாழ்மங்கலம் பஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து பஸ்சில் ஏறி செல்ல வேண்டும். இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
வழிபறி, திருட்டு
இந்த நிலையில் மையப்பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 
இதை பயன்படுத்தி கொள்ளையர்கள் வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.  இந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இரவில் சாலைகளில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர்.
நடவடிக்கை
இந்த உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காட்சிப்பொருளாக உள்ள உயர் கோபுர மின்விளக்கை சரி செய்து ஒளிரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
---

மேலும் செய்திகள்