தர்மபுரியில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்
தர்மபுரியில் நடந்த விழாவில் திருநங்கைகளுக்கு ரூ.22.65 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
தர்மபுரி:
தர்மபுரியில் நடந்த விழாவில் திருநங்கைகளுக்கு ரூ.22.65 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
உலக திருநங்கைகள் தின விழா
தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்-மகளிர் திட்டம் சார்பில் உலக திருநங்கைகள் தின விழா தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட அலுவலர் பாபு வரவேற்று பேசினார்.
விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 5 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள், சுகாதார நாப்கின் உற்பத்தி மையம் தொடங்குவதற்கு நிதியுதவி, தனிநபர் கடனுதவி, இலவச தையல் எந்திரங்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் திருநங்கைகளுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 84 திருநங்கைகளுக்கு ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகள்
முன்னதாக திருநங்கைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து உளவியல் நிபுணர் டாக்டர் சாலினி திருநங்கைகளுக்கான மருத்துவ ஆலோசனைகள் குறித்து காணொலி காட்சி மூலம் பேசினார். இந்த நிகழ்ச்சிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்திய திருநங்கைகளுக்கும் மற்றும் திருநங்கைகளுக்கான சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைத்த களப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், உதவி கலெக்டர் சித்ரா விஜயன், நல்லம்பள்ளி தாசில்தார் நிவேதா, அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க மாநில வளப்பயிற்றுனர் மணி உட்பட அரசு அலுவலர்கள், திருநங்கைகள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.