டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க புதிய சட்டம்

டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க புதிய சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம், இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-04-02 16:32 GMT
பொள்ளாச்சி

டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க புதிய சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம், இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

வேலைநிறுத்தம்

ராஜஸ்தானில் கர்ப்பிணிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த டாக்டர் அர்ச்சனா சர்மா மீது தவறாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும், தற்கொலை செய்த  அர்ச்சனா சர்மாவின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும், நீண்டகால கோரிக்கையான டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு புதிய சட்டம் அமல்படுத்த வேண்டும்.,

டாக்டர்களை குற்றவாளிகளான பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் மாற்றம் வேண்டும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதிக இழப்பீடுகள் கேட்கும் வழக்குகளில் இருந்து மருத்துவ துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது.

சப்-கலெக்டரிடம் மனு

இதையொட்டி பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படவில்லை. அவசர சிகிச்சை பிரிவுகள் மட்டும் வழக்கம்போல் இயங்கின. வெளிநோயாளிகள் பிரிவு செயல்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கிராமப்புறங்களில் இருந்து பொள்ளாச்சிக்கு சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

இதற்கிடையில் பொள்ளாச்சி கிளை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. இதில் சங்க தலைவர் திருமூர்த்தி, செயலாளர் சரவணன், டாக்டர் வரதராஜன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்