ரெயில்வே மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து 21-ந்தேதி உண்ணாவிரதம்

நாகை தோணித்துறையில் ரெயில்வே மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து 21-ந்தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-02 16:29 GMT
நாகப்பட்டினம்:
இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திரநாட்டார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  
நாகை மாவட்டம் போக்குவரத்து, மீன்பிடி தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சிக்கும், வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள், பக்தர்கள் செல்லும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் நாகை தோணித்துறையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு 2013- ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு பகுதி மட்டுமே பாலம் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், மற்றொரு பகுதியின் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இரவு, பகல் எந்நேரமும் சரக்கு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் செல்வதால் அடிக்கடி ரெயில்வேகேட் மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தோணித்துறை ரெயில்வே மேம்பால பணி நிறுத்தப்பட்டுள்ளதை கண்டித்து வருகிற 21-ந்தேதி (வியாழக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்