உகாதி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
உகாதி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கம்
உகாதி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் பிரசித்தி பெற்ற ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
உற்சவருக்கும், அனைத்து சன்னதிகளில் எழுந்தருளியிருக்கும் மூலவர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
போளூர்
போளூரில் தெலுங்கு பேசும் மக்கள் உகாதி பண்டிகையை கொண்டாடினர். புத்தாடை அணிந்து இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என ஏழு சுவையான பச்சடியை உட்கொண்டனர்.
கோவில்களில் விசேஷ பூஜைகள் நடத்தி, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர். வாசவி கிளப் சார்பில் பொதுமக்களுக்கு மோர் வழங்கினர்.
கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு விசேஷ பூஜை, ஆராதனை நடந்தது. இதையடுத்து அர்ச்சகர் சந்தோஷ் பஞ்சாங்கம் வாசித்து பல பலன்களை கூறினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வேட்டவலம்
வேட்டவலம் பெரியார் தெருவில் உள்ள ராமலிங்க சாமூண்டீஸ்வரியம்மன் கோவிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சமிர்தம், சந்தனம் ஆகிய சுகந்த திரவியத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அம்மனுக்கு பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் தேவாங்கர் சமூக பெண்கள் பொங்கல் வைத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் காந்தி தெருவில் ஆரிய வைசிய சமாஜத்துக்கு சொந்தமான வாசவி மகாலில் கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. அங்கு தெலுங்கு வருட பிறப்பையொட்டி உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது.
சமாஜத்தின் சார்பில், ஆரிய வைசியர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் வேப்பம்பூ, வெல்லம், புளி, வறுகடலை ஆகியவை கலந்த ‘சேந்து' எனப்படும் கசப்பு வழங்கப்பட்டது.
விழாவையொட்டி கோவிலில் மூலவர் கன்னிகா பரமேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வெள்ளிக்கவசமும், மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. இதில் ஆரிய வைசிய சமூகத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். அர்ச்சகர் பஞ்சாங்கம் படித்து, அதற்கான பலன்களை விளக்கி கூறினார்.