அம்மன் கோவிலில் 5 பவுன் நகை திருட்டு
திண்டிவனம் அருகே அம்மன் கோவிலில் 5 பவுன் நகை திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே பாஞ்சாலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூசாரி சுந்தரம்(வயது 64) பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டிச்சென்றார். பின்னர் அவர், நேற்று காலை 5 மணி அளவில் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவும் திறந்து கிடந்தது.
நகை-பணம் திருட்டு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரிந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் ரோசனை போலீசார் விரைந்து சென்று திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.