மின்மோட்டாரில் தாமிர கம்பி திருடிய வாலிபரை கட்டிப்போட்டு தாக்கிய விவசாயிகள்
விழுப்புரம் அருகே மின்மோட்டாரில் தாமிர கம்பி திருடிய வாலிபரை கட்டிப்போட்டு விவசாயிகள் தாக்கினர். மேலும் போலீசாரை கண்டித்து மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே வி.புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக விவசாய விளைநிலங்களில் இருக்கும் மின் மோட்டார்களில் உள்ள தாமிர கம்பிகள் தொடர் திருட்டுப்போனது. இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்யும்படி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலமுறை வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வி.புதூரை சேர்ந்த சி.ஏழுமலை (வயது 70) என்பவருடைய நிலத்தில் இருக்கும் மின் மோட்டாரில் உள்ள தாமிர கம்பிகளை 3 வாலிபர்கள் திருடிக்கொண்டிருந்தனர்.
வாலிபரை கட்டிப்போட்டு தாக்குதல்
அந்த சமயத்தில் அங்கு வந்த சி.ஏழுமலையை கண்டதும் 3 வாலிபர்களும் அங்கிருந்து ஓடினர். உடனே சி.ஏழுமலை, அந்த பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், தொழிலாளர்கள் உதவியுடன் 3 பேரையும் மடக்கினார். இதில் 2 பேர் அவர்களிடமிருந்து தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் விவசரியகளிடம் பிடிபட்டார். விசாரணையில் அவர், வளவனூர் புதுக்காலனியை சேர்ந்த விசாலிங்கம் மகன் ஏழுமலை (23) என்பது தெரிந்தது. இதையடுத்து வாலிபரின் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு விவசாயிகள் தாக்கினர். மேலும் இது குறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசாரிடம் வி.ஏழுமலையை ஒப்படைத்தனர். அதோடு தப்பி ஓடிய மற்ற 2 பேரின் விவரங்களையும் போலீசாரிடம் கூறினர்.
விவசாயிகள் சாலை மறியல்
இதையடுத்து வி.ஏழுமலையை வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவரை கைது செய்து சிறையில் அடைப்பதில் போலீசார் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த வி.புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9.30 மணியளவில் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் 9.35 மணியளவில் அவர்கள் அனைவரும் போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது வி.ஏழுமலையை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கும்படியும், தப்பி ஓடிய மற்ற 2 பேரான வளவனூர் வீரன் கோவில் தெருவை சேர்ந்த முருகையன் மகன் முரசொலிமாறன் (23), வளவனூர் புதுக்காலனியை சேர்ந்த முருகன் மகன் கோகுல் (19) ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்யக்கோரியும், இவர்கள் விவசாய மின்மோட்டார்களில் உள்ள தாமிர கம்பிகளை திருடிக்கொண்டு அதை இரும்புக்கடையில் விற்று வருவதால் அதை வாங்கும் சம்பந்தப்பட்ட இரும்புக்கடை உரிமையாளர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஏழுமலையை சிறையில் அடைப்பதோடு தப்பிச்சென்ற 2 பேரையும் விரைவில் கைது செய்வதாகவும் போலீசார் உறுதியளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அனைவரும் காலை 9.45 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
2 வாலிபர்கள் கைது
இதனிடையே விவசாய மின் மோட்டாரில் உள்ள தாமிர கம்பிகளை திருடியதாக வி.ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். முரசொலிமாறன், கோகுல் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடினர். இதனிடையே வளவனூரில் பதுங்கி இருந்த முரசொலிமாறனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கோகுலை மட்டும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.