போலீஸ் ஏட்டு மீது பீர்பாட்டிலால் தாக்குதல்
பேரளம் அருகே கோவில் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் ஏட்டை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
நன்னிலம்:
பேரளம் அருகே கோவில் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் ஏட்டை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தீமிதி திருவிழா
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள மேனாங்குடி கிராமத்தில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடந்தது. விழா முடிந்தவுடன் இன்னிசை கச்சேரி நடந்தது.
கோவில் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் பேரளம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அங்கு நடந்து கொண்டிருந்த இன்னிசை கச்சேரியின் பாடலை கேட்டு அங்கிருந்த சிலர் ஆடி, பாடினர்.
பீர்பாட்டிலால் தாக்குதல்
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு குமரவேல் என்பவர் அவர்களை கீழே அமர்ந்து பாருங்கள் என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த பாலூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 28) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டிலால் குமரவேல் தலையில் தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்தம் சொட்டிய நிலையில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்ததும் அருகில் இருந்த போலீசார் குமரவேலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கைது
இதுகுறித்து பேரளம் போலீசில் குமரவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டை வாலிபர், பீர்பாட்டிலால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
----