நடிகர் ஷாருக்கான் மகன் வழக்கில் சாட்சி திடீர் சாவு
போதைப்பொருள் தொடர்புடைய ஆர்யன் கான் வழக்கில் சாட்சி திடீரென உயிரிழந்தார்.
மும்பை,
மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் நடிகா் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர். இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சாட்சியாக இருந்தவர் பிரபாகர் சாயில். இவர் திடீரென போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு எதிராக பரபரப்பு தகவலை வெளியிட்டார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் அதன் மற்றொரு சாட்சியான கே.பி. கோசவி, ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசியதாக இவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில் செம்பூர் மாகுல் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த போது பிரபாகர் சாயிலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக குடும்பத்தினர் அவரை ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
பிரபாகர் சாயிலின் மரணத்தில் குடும்பத்தினருக்கு சந்தேகம் எதுவுமில்லை என அவரது வக்கீல் கூறியுள்ளார்.