கொடைக்கானல் வனப்பகுதியில் கொழுந்து விட்டு எரிந்த காட்டுத்தீ
கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அங்குள்ள மூலிகைச்செடிகள், மரங்கள் நாசமானது.;
கொடைக்கானல்:
வனப்பகுதியில் காட்டுத்தீ
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் வனப்பகுதியில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பல்வேறு இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதேபோல் தனியார் தோட்டங்களிலும் தீப்பிடித்தது. தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறினர்.
அந்த சமயத்தில் வருண பகவான் கருணை காட்டியதால் அவ்வப்போது சாரல் மழையும், கனமழையும் கொடைக்கானலில் கொட்டித்தீர்த்தது. இதனால் காட்டுத்தீ அணைந்தது. வனத்துறையினரும், மலைக்கிராம மக்களும் நிம்மதி அடைந்தனர்.
மூலிகைச்செடிகள் நாசம்
இந்தநிலையில் கொடைக்கானல் அருகே உள்ள வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் மள, மளவென பரவிய காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்தது.
அப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகைச்செடிகள், மரங்கள் தீயில் கருகி நாசமாயின. இதுமட்டுமின்றி வனப்பகுதியில் உள்ள விலங்குகள், இடம்பெயரும் சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்து வனச்சரகர் குமரேசன் கூறுகையில், பெரும்பள்ளம் வனச்சரக பகுதிக்கு அருகே தனியார் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. அதில் ஏற்பட்ட தீ, பலத்த காற்று காரணமாக வனப்பகுதிக்கும் பரவியது. இதன் காரணமாக புதர்கள், புற்கள் எரிந்து சாம்பலாயின. காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 25-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றார்.
மலைக்கிராம மக்கள் பாதிப்பு
கொடைக்கானல் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் விண்ணை தொடும் அளவுக்கு புகைமூட்டம் எழும்பியது. இந்த புகைமூட்டத்தினால் வடகவுஞ்சி, செம்பரான்குளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுமட்டுமின்றி வனப்பகுதியில் இருந்து காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வெளியேறி மலைப்பாதைகளிலும், விவசாய நிலங்களிலும் தஞ்சம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.