ஊட்டியில் டீசல் விலை ரூ100ஐ கடந்து புதிய உச்சம்
ஊட்டியில் டீசல் விலை ரூ.100-ஐ கடந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.110.4-க்கு விற்பனையானது.
ஊட்டி
ஊட்டியில் டீசல் விலை ரூ.100-ஐ கடந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.110.4-க்கு விற்பனையானது.
சதம் அடித்த டீசல்
தமிழகத்தில் 137 நாட்களுக்கு பின்னர் கடந்த 22-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 103.63-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த 12 நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.65 ஆகவும், டீசல் ரூ.99.38 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஊட்டியில் டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கியது. இதனால் கனரக வாகன ஓட்டுனர்கள், டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் மேலும் பெட்ரோல், டீசல் உயர்ந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 75 காசுஅதிகரித்து ரூ.110.4-க்கு விற்பனையானது. டீசல் 76 காசு உயர்ந்து 100 ரூபாயை கடந்தது. நேற்று டீசல் ரூ.100.14-க்கு விற்பனை செய்யப்பட்டது. மலைப்பிரதேசத்தில் பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் சதமடித்து உள்ளது. கடந்த 12 நாட்களில் சுமார் 7 ரூபாய் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.
அத்தியாவசிய பொருட்கள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது:- சமவெளி பகுதிகளை விட பெட்ரோல், டீசல் விலை ஊட்டியில் அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தக்காளி, கத்தரிக்காய், சின்ன வெங்காயம் போன்ற காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் செங்கல், மணல், சிமெண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் சரக்கு வாகனங்களில் ஏற்றி வரப்படுகிறது. எரிபொருள் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் வாடகை கட்டணம் அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் இருக்கிறது.
மேலும் கட்டுமான பொருட்கள் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் கூலி வேலை செய்துவரும் மக்கள், ஏழை, எளியோர் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.