செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாலிபரின் தொடையில் சிக்கிய கம்பி வெற்றிகரமாக அகற்றம்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாலிபரின் தொடையில் சிக்கிய கம்பி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் தாலுக்கா, சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் நிருவனத்தின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அங்கு வடமாநிலத்தை சேர்ந்த பிரேம் சத்ரி(வயது 28) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த மார்ச் 30-ந் தேதியன்று 2-ம் தளத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது தொடையில் கம்பி ஒன்று குத்தி வெளியே வந்தது. இவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஆஸ்பத்திரியின் டீன் முத்துகுமரன் மேற்பார்வையில் பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் செல்வராஜ் தலைமையில் டாக்டர்கள் அரசு, கிரண்குமார், மோகன்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் வெற்றிகரமாக தொடையில் சிக்கிய இருப்பு கம்பி அகற்றப்பட்டது.
இதனையடுத்து சிகிச்சை பெற்று வரும் பிரேம் சத்ரிக்கு டீன் முத்துகுமார் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த அறுவை சிகிச்சை தனியார் ஆஸ்பத்திரியில் செய்திருந்தால் சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகியிருக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.