கொளப்பாக்கத்தில் விதிமுறையை மீறி இயங்கிய பெட்ரோல் பங்கிற்கு சீல்
கொளப்பாக்கத்தில் விதிமுறையை மீறி இயங்கிய பெட்ரோல் பங்கிற்கு வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் சீல் வைத்தார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவுபடி வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நேற்று வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்கிற்கு நேரில் சென்று பெட்ரோல் பங்க் அலுவலகத்தை இழுத்து மூடி சீல் வைத்தார்.
பின்னர் இதுகுறித்து வண்டலூர் தாசில்தார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொளப்பாக்கத்தில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் விதிமீறல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
மேலும் பெட்ரோல் பங்கில் பெட்ரோலியம் சட்டம் மற்றும் விதிகள் உரிய முறையில் பின்பற்றப்படாமல் இருந்த காரணத்தினால் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ. ஆகியோரின் உத்தரவுப்படி பெட்ரோல் பங்கிற்கு சீல் வைத்துள்ளோம்.
மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை பொதுமக்களுக்கு பெட்ரோல் வினியோகம் செய்யக்கூடாது என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறி பங்க் செயல்பட்டால் வருவாய் துறையினர் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.