திருவள்ளூர் அருகே வேன் மோதி காவலாளி பலி
திருவள்ளூர் அருகே வேன் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.;
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 72). இவர் பேரம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தினந்தோறும் வேலைக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை தட்சிணாமூர்த்தி வேலை முடித்துவிட்டு மீண்டும் பேரம்பாக்கத்தில் இருந்து களாம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது பேரம்பாக்கத்தில் இருந்து கடம்பத்தூர் நோக்கி வேகமாக வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
டிரைவர் வேனை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இறந்த தட்சிணாமூர்த்தியின் மகன் பாபு மப்பேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய வேன் டிரைவர் யார் என்று தேடி வருகிறார்கள்.