திருத்தணி அருகே அங்கன்வாடி மைய மேற்கூரை இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் படுகாயம்
திருத்தணி அருகே அங்கன்வாடி மைய மேற்கூரை இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான்.
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்தவர். மூர்த்தி. இவரது மனைவி ராஜேஷ்வரி. இவர்களது மகன் விமல்ராஜ் (வயது 5). நேற்று காலை 9 மணிக்கு சிறுவன் விமல்ராஜை பூனிமாங்காடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர். அங்கு 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 11 மணியளவில் அங்கன்வாடி மைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் சிறுவன் விமல்ராஜ் தலையில் பலமாக அடிபட்டு அலறி துடித்தான் படுகாயமடைந்த விமல்ராஜுக்கு அருகில் உள்ள பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விமல்ராஜ் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு 2 தையல்கள் போடப்பட்டுள்ளது. விபத்து நடந்த அங்கன்வாடி மையத்தில் உணவு இடைவேளை நேரம் என்பதால் மற்ற குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வெளியே சென்று விளையாடி கொண்டிருந்தனர். சிறுவன் விமல்ராஜ் மட்டும் பள்ளியில் தூங்கி கொண்டிருந்ததான்.
இது குறித்து தகவலறிந்து வந்த திருத்தணி தாசில்தார் விஜயகுமார், திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் ஆகியோர் சிறுவனின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
விபத்து குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் கூறுகையில்:-
இடிந்த அங்கன்வாடி மைய கட்டிடம் 40 ஆண்டு காலம் பழமையானது. விரைவில் அரசு அனுமதி பெற்று பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிகமாக அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் அங்கன்வாடி மையம் இயங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.