கும்மிடிப்பூண்டி அருகே ரூ.7 லட்சம் கஞ்சா சிக்கியது; 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே ரூ.7 லட்சம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-02 06:53 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் சத்யவேடு செல்லும் சாலையில் நேற்று அதிகாலை இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது ஆந்திராவில் இருந்து அந்த வழியாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட குறிப்பிட்ட ஒரு சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு அவற்றில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கேரளாவுக்கு 33 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த நவ்பால்(வயது 29), சுல்பிகர்(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் உள்பட 4 போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் நேரில் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

மேலும் செய்திகள்