சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாய்மாமனுக்கு வலைவீச்சு
சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த தாய் மாமனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க தவறிய குழந்தைகள் நலக்குழு பெண் உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
திருவொற்றியூர்,
காசிமேட்டை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருக்கு 1 வயதில் குழந்தை இருந்தது. இந்தநிலையில் இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே தனது தம்பியான தேசப்பன் என்பவரிடம் தனது 1 வயது மகளை கொடுத்துவிட்டு சிறுமியின் தாய் வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். தேசப்பன் குழந்தையை மகளாக வளர்த்து வந்த நிலையில் 9 வயதானவுடன் சிறுமிக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் தாய்மாமன் தேசப்பன் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி வீட்டை விட்டு வெளியேறி பிராட்வேயில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வந்துள்ளார். பின் சிறுமிக்கு 13 வயதான நிலையில் காப்பகத்தில் இருப்பதை அறிந்த தேசப்பனும், அவரது மனைவி ரேவதியும் நேரில் சென்று, காப்பகத்தினரிடம் பேசி சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
பின் தேசப்பன் மீண்டும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவந்தார். இதில் கர்ப்பமான சிறுமியின் கருவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் தேசப்பன் தனது நண்பர்களான சிவா, சீனிவாசன், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து கொடுமை தாங்க முடியாமல், கடந்த 2020-ம் ஆண்டு சிறுமி வீட்டை விட்டு வெளியேறி பிராட்வேயில் சுற்றித்திரிந்த போது குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டு, பெரவள்ளுரில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்க வைத்தனர். அங்கு அவருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கு சென்னை ஐகோர்ட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமி தந்த வாக்குமூலம் அடிப்படையில், ராயபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சிறுமியின் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் சிறுமியின் தாய் மற்றும் தாய்மாமன் மனைவி ரேவதி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், சிறுமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருவதை அறிந்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இசபெல்லை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான தாய்மாமன் தேசப்பன், ரமேஷ், சீனிவாசன் மற்றும் சிவா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.