விவசாயி உள்பட 2 பேரிடம் ரூ.1 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஆன்லைனில் விவசாயி உள்பட 2 பேரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-01 22:13 GMT
சேலம், 
செல்போன் கோபுரம்
பெத்தநாயக்கன்பாளைத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 54). விவசாயி. இவரது செல்போன் எண்ணுக்கு தங்கள் நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க இடம் கொடுத்தால் அதிகம் பணம் வழங்கப்படும். அதற்கு முன்பணமாக ரூ.51 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்தது.
இதை நம்பி அவர் ஆன்லைன் மூலம் ரூ.51 ஆயிரம் செலுத்தினார். சில நாட்களுக்கு பிறகு காப்பீட்டிற்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதும்,  ரூ.51 ஆயிரம் மோசடி நடந்ததும் தெரியவந்தது.
மருந்து விற்பனை பிரதிநிதி
சங்ககிரியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (31). மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது செல்போனுக்கு, பிரபல கம்பெனி தயாரிக்கும் பென்சில்கள், பேக்கிங் செய்து கொடுத்தால் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று குறுஞ்செய்தி வந்தது. இதற்காக அவர் முன்பணமாக 3 தவணைகளில் ரூ.57 ஆயிரத்து 645 செலுத்தினார்.
அதன்பிறகு அவரது செல்போன் எண்ணுக்கு எந்த தகவலும் வரவில்லை. குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 
இது குறித்து 2 பேரும் சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலம் விவசாயி உள்பட 2 பேரிடம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 645 மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்