நூல் விலை உயர்வு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு

நூல் விலை உயர்வால் சேலம் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Update: 2022-04-01 22:02 GMT
சேலம், 
நூல் விலை உயர்வு
சேலம் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. இதை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளன. இந்த நிலையில் ஜவுளி உற்பத்திக்கு பயன்படுத்தும் முக்கிய மூலப்பொருளான நூல் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
குறிப்பாக வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்ட பல்வேறு துணி வகைகளை தயாரிக்க 40-ம் நம்பர் நூலையே நெசவாளர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 50 கிலோ எடை கொண்ட 40-ம் நம்பர் நூல் ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதன் விலை ரூ.8 ஆயிரம் அதிகரித்து ரூ.17 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 90 சதவீதம் வரையிலும் நூல் விலை உயர்ந்துள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். 
ஆர்டர்கள் குறைவு
அதேசமயம், நூல் விலை உயர்வால் புதிய ஆர்டர்கள் பெறுவது குறைந்துவிட்டதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்க தலைவர் சரவணன் கூறுகையில், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜவுளிக்கு தேவையான நூல்கள் வாங்கப்படுகின்றன. இதில், 40, 60, 30 ரக நூல்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பஞ்சு விலை உயர்வால் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. தற்போது 40-ம் நம்பர் நூல் டன் ஒன்றுக்கு ரூ.47 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது, என்றார்.
முடங்கும் அபாயம்
ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறும் போது, நூல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இதை நம்பி உள்ள நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். தொடர்ந்து நூல் விலை உயர்ந்தால் ஜவுளி ெதாழில் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே ஜவுளி தொழிலை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்