குப்பை இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை நரசிங்கபுரம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
நரசிங்கபுரத்தை குப்பை இல்லா நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
ஆத்தூர்,
நகராட்சி கூட்டம்
ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சி முதல் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் தர்மராஜ், ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை தலைவர் அலெக்சாண்டர் தொடங்கி வைத்து பேசும் போது, ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தி எங்களை வெற்றி பெறச்செய்த, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவலிங்கம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வருகிறேன்’ என்றார். இந்த தீர்மானம் கவுன்சிலர்களின் பலத்த கரகோசத்துக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
குப்பை இல்லா நகரம்
கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் மாலா, புஷ்பவதி, சுகுணா உள்பட 7 கவுன்சிலர்கள் பேசும் போது, தங்கள் பகுதியில் துப்புரவு பணிகள் சரிவர நடப்பதில்லை. குடிநீர் வினியோகம் முறையாக நடப்பதில்லை. உப்புத்தண்ணீர் வினியோகமும் சரிவர நடைபெறவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர்.
இதற்கு நகராட்சி தலைவர் அலெக்சாண்டர் பதில் அளித்த போது, ‘நாம் பதவிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அனைத்து பணிகளும் முறையாகவும், சரியாகவும் நடக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம். மேலும் குப்பையில்லா நகரமாக நரசிங்கபுரம் நகராட்சியை உருவாக்க பாடுபடுவோம்’ என்றார். இதையடுத்து நரசிங்கபுரத்தை குப்பை இல்லா நகரமாக்க மாற்ற நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.